கடல் கொந்தளிப்பால் பாதிப்பு - ஒரு செய்தித் தொகுப்பு
பலியானவர்களின் எண்ணிக்கை 2400-ஐ தாண்டி விட்டது. அதில் சுமார், 1500 பேர் நாகையிலும், 250 கடலூரிலும், 300 பேர் கன்யாகுமரியிலும், 150 பேர் சென்னையிலும், 100 பேர் புதுவையிலும் உயிர் இழந்தனர். சென்னை கடற்கரையில் இத்தனை பேர் இறந்ததற்கும், பலர் காணாமல் போனதற்கும் காரணம், இது ஒரு ஞாயிறு காலையில் ஏற்பட்டதால் தான். பீச்சில் தூங்கி கொண்டிருந்தவர்கள், காலையில் நடை பயின்றவர்கள், விளையாடிய சிறுவர்கள் என்று பலரும் இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காமல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார்கள், மூழ்கடிக்கப்பட்டார்கள். ராயபுரம் பகுதியில் உள்ள குப்பங்களிலும் பலர் இறந்து விட்டார்கள். ராயப்பேட்டை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் MRTS ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்களில் பலர் (இளைஞர்கள்/மீனவர்கள்) மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது. மத்திய அரசு நெருக்கடி கால நடவடிக்கை குழு ஒன்றை கூட்டி விவாதித்ததன் தொடர்ச்சியாக, பிரதமர், கடற்படையை மீட்பு/நிவாரணப் பணியில் முழு அளவில் ஈடுபட, முடுக்கி விட்டுள்ளார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் (Red Alert) செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பட்டிணம் என்ற இடத்தில் ஒரு தேவாலயம் இடிந்து விழுந்து 40 பேர் பலியாயினர். அந்தமான்-நிகோபார் தீவிகளிலும் காலையில் 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெருத்த உயிர்/பொருள் சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று கூறப்படுகிறது. சேலத்திலும், சுற்றுப்பட்ட இடங்களிலும், பூமியில் பெரிய வெடிப்புகள் தோன்றியுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சுமார் 500 படகுகள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன என்று கூறப்படுகிறது. சகஜ நிலைக்கு வர சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஆந்திராவில், திருப்பதி மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. ஆந்திர கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பால், சுமார் 200 பேர் இறந்ததாகத் தெரிகிறது.
சன் டிவி செய்திகளை உடனுக்குடன் வழங்கினாலும், அரசாங்கத்தை குறை சொல்வதே அதன் முக்கிய நோக்கமாகப் பட்டது. நம் நாட்டில், போர்க்கால நடவடிக்கை என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது என்பது தான் உண்மை! ஒரு 'catastrophe'-ஐ எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மிகக்குறைவு. இதற்காக ஒரு பயிற்சியும் அளிக்கப்படுவதும் இல்லை. சிவராஜ் பாட்டீல் நாளை சென்னை வருகிறார். எதற்கு என்று புரியவில்லை? எல்லாம் ஆனபிறகு இந்த அரசியல்வாதிகள் வந்து ஆறுதல் சொல்வதால் என்ன பயன்? அவரவர் இடங்களிலேயே இருந்தபடி, வேலை செய்பவர்களை முடுக்கி விடுவதும், வேண்டிய உதவிகளுக்கு உத்தரவிடுவதும் செய்தாலே போதுமானது!
இன்னொரு நிலநடுக்கத்தை அடுத்த ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம் என டிவியில் ஒரு நிபுணர் கூறினாலும், நான் பார்த்தவரை, தற்போது, சென்னை மக்களிடையே பீதியும், பதற்றமும் குறைந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் SYMA (Srinivasa Young Men's Association) என்னும் அமைப்பு, பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு சத்திரமும், அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்! பல ஆண்டுகளாக, ஆரவாரம் இல்லாமல், SYMA சமூக சேவை செய்து வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
இந்த நிலநடுக்கம்/கடல் கொந்தளிப்புக்கு சென்னையில் நிலத்தடி நீரை ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது. நிபுணர்கள் தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
3 மறுமொழிகள்:
/இந்த நிலநடுக்கம்/கடல் கொந்தளிப்புக்கு சென்னையில் நிலத்தடி நீரை ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது./ இப்படி ஒரு சந்தேகம் ரொம்ப நாளாய் எனக்கு இருக்கிறது. காலையில் -லேசான நிலநடுக்கம் - முதல் செய்தியாய் வந்தபோது இப்படி ஒரு காரணம் இருக்குமோ என்று தோன்றியது. இப்போது இல்லை! நிலமை சுமுகமானதும் யோசிக்கவேண்டிய விஷயம் இது என்று தோன்றுகிறது.
தகவலுக்கு நன்றி பாலா ! வலைப் பதிபவர்கள் மூலம் நிறைய செய்திகள் தெரிந்துக்கொண்டோம்..
மீண்டும் நன்றி பாலா. தொடர்ந்து அதிகாரப் பூர்வ தகவல் தாருங்கள்.
Post a Comment